search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பெருக்கு விழா"

    • காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
    • மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    வேலூர்:

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ள சுப்பிரமணியசாமி, வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

    காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவில், கைலாசகிரி மலைகொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளையாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூளை கேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை தண்டகோடிமலை முருகன் கோவில், ரெட்டிபாளையம் முருகன் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு 1 லட்சத்திற்கும் அதிக மான பொது மக்கள் வந்து செல்வார்கள்.

    சேலம்:

    காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அனைவரது வாழ்வில் காவிரி போல மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம்.

    மேள தாளங்கள்....

    அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி தொலை தூர கிராம மக்கள் தங்களது குல தெய்வங்களை தலையில் சுமந்த படி விடிய விடிய நடந்து வந்து ஆடி 18 அன்று மேட்டூர் காவிரியில் நீராட்டி மீண்டும் தங்களது கிராமங்களுக்கு மேள தாளங்களுடன் எடுத்து செல்வார்கள்.

    பொது மக்களும் காவிரியில் நீராடி மகிழ்வார்கள். புது மண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து வழிபட்டு காவிரி ஆற்றில் விட்டு செல்வார்கள். இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு 1 லட்சத்திற்கும் அதிக மான பொது மக்கள் வந்து செல்வார்கள்.

    கூடுதல் பாதுகாப்பு

    மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம், டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அணை கட்டு முனியப்பனை பக்தர்கள் இடையூறின்றி தரிசித்து செல்ல முனியப்பன் கோவில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பொது மக்கள் நீராட காவிரி பாலப்பகுதியில் உள்ள 2 படித்துறைகள், மட்டம் பகுதியில் உள்ள 3 படித்துறைகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதி கிடையாது.

    மேட்டூர் நகராட்சி சார்பில் தற்காலிக உடைமாற்றும் அறைகள் , கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மேட்டூர் டி.எஸ்.பி. தலைமையில் 200 போலீசார் ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ். மாணவர்கள், சாரண சாரணியர்கள் ஈடுபடுகிறார்கள்.

    ஆம்புலன்ஸ்கள்

    தீயணைப்பு வீரர்கள் 20 பேர் காவிரி கரையில் படகுகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். 5 பரிசல்கள், ரப்பர் படகுகள் நிறுத்தப்படும் . தற்காலிக புறக்காவல் நிலையம், முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்களகள் , தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    5 இடங்களில் கண்கா ணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது தவிர 12 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் கண்காணிக்கிறார்கள். சேலம், மேச்சேரி, ஈரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் அரசு ஆண்கள் பள்ளியிலும்,

    கூடுதலாக வாகனங்கள் வந்தால் 4 ரோடு பகுதியிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொளத்தூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் அணை வலது கரை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட வேண்டும், திருடர்கள், குற்ற வாளிகளை கண்காணிக்க சாதாராண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் ஆடிப்பெருக்கு விழாவிற்கான கடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நிலை உள்ளது.
    • ஒகேனக்கல் பகுதியில் கழிப்பிட வசதி, , குடிநீர் வசதி, , அமருமிடம், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவானது வருகிற 2-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதிக்கு தருமபுரி, சேலம் ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நிலை உள்ளது.

    இதனால் ஒகேனக்கல் பகுதியில் கழிப்பிட வசதி, வாகன நிறுத்து மிடம், குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், அமருமிடம், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    காவிரி ஆற்றில் பாதுகாப்பாக நீராடுவது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, இளங்குமரன் ஆகியோர்கள் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வுகளின் போது ஊராட்சி செயலர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், துணைத் தலைவர் மணி, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள், புதுமண தம்பதிகள், மூத்த பெண்களிடம் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.
    • மழை வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், கொடிய நோயிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும் பக்தர்கள் வழிபட்டனர்.

    திருச்சி :

    தா.பேட்டை பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு செவந்தாம்பட்டி ஆற்றுப் பிள்ளையார் கோவிலில் பெண்கள், புதுமண தம்பதிகள், மூத்த பெண்களிடம் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். மேலும் வீடுகளின் பூஜை அறைகளில் பழங்கள் வைத்தும் வழிபட்டனர்.

    தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மனுக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு செவந்தம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் சுமந்தும், அக்னி சட்டி ஏந்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது பெரியமாரியம்மன், கிராம விநாயகர், சந்திகருப்பு உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் வளையல் அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மழை வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், கொடிய நோயிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும் பக்தர்கள் வழிபட்டனர்.

    இதேபோன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ஸ்ரீ ராஜகாளியம்மன், செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி, கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • புதுமண தம்பதிகள் தாலி மாற்றி வழிபட்டனர்
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஸ்ரீஅலமேலுமங்கை, பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலின் வரலாறு சார்ந்த பெருமாளின் தங்கையாக ஆற்றின் நடுவில் சென்னம்மாள் பாறை உள்ளது. இந்தக் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற்றது.

    விழாவில் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களிலிருந்தும், சென்னை, பெங்களுர் போன்ற பெருநகரங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்கள் பொங்கலிட்டு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காதணிவிழா நடத்தியும் வழிபட்டனர்., புதுமண தம்பதியினர் புது தாலி கயிறு மாற்றுதல், சென்னம்மாள் பாறையில் மஞ்சள், சிவப்பு, பொறி கடலை, கருமணி வலையல் போன்றவை வைத்து பச்சை போடுதல் போன்ற பல்வேறு பிராத்தனைகள் செய்து வழிபட்டனர்.

    திருவண்ணாமலை, போளுர், ஊத்தங்கரை, செங்கம், சிங்காரப்பேட்டை, அருர் நகரங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.பத்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×